Wednesday, October 12, 2011

வீ‌ட்டிலேயே இரு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம்


கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும். 

பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம். 

சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம். 

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம். 

காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும். 

வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

Friday, October 7, 2011

எளிதில் கிடைக்கும் மூலிகைகள்


மூலிகை என்றால் ஏதோ காடு, மலை எல்லாம் சுற்றித்திரிந்து கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மூலிகைகளைப் பற்றித் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது. உதாரணமாக, குழந்தைகளுக்குச் சளிபிடித்து விடும். லேசான காய்ச்சல் இருக்கும். உடனே டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். டாக்டர் ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகளைக் கொடுப்பார். ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகள் குடலில் புண்ணை ஏற்படுத்தும். மேலும் ஒவ்வொரு முறையும் மருந்தின் அளவை அதிகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அது வேலை செய்யும். அதனால் உடலுக்குப் பல்வேறு கேடுகள் உண்டாகும்.
இதற்கு ஓர் எளிய மருத்துவம் உள்ளது. கற்பூரவல்லியின் இலையை நசுக்கி 1 டம்ளர் தண்ணீரில் 10 சொட்டு விட்டு அதனுடன் சிறிது தேன் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால் சளி நீங்கிவிடும். நுரையீரல் சுத்தமாகிவிடும். குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இது எவ்வளவு எளிய - ஆனால் தீங்கில்லாத மருத்துவம்?
12 - 13 வயது வரை குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லை இருக்கும். பூச்சி அதிகமானால் ரத்த சோகை ஏற்படும். பசி எடுக்காது. முகத்தில் வெண்திட்டுகள் அங்கங்கே இருக்கும்.
இதற்கு மூலிகை வைத்தியத்தின் மூலம் எளியமுறையில் தீர்வு காணலாம். வேப்பங்கொழுந்தை நசுக்கி, மிளகு, சீரகத்தை நுணுக்கி மூன்றையும் பாலில் போட்டு ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து வடிகட்டிக் குழந்தைகளுக்கு அதைக் குடிக்க கொடுக்க வேண்டும். இந்த மருந்துக்குப் பெயர் வேப்பங்காரம். பூச்சித் தொல்லை அடியோடு ஒழிவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரித்துவிடும்.
குழந்தைகளுக்கான இன்னொரு அருமையான மருந்து வசம்பு. இதைப் பிள்ளை வளர்த்தி என்பார்கள். வசம்பை விளக்கெண்ணையில் நனைத்து, விளக்கெண்ணை ஊற்றி எரியும் அகல் விளக்கில் காட்டிச் சுட்டு, அதன் கரியைப் பாலில் கலந்து கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் ஞாபகச் சக்தியை அதிகரிக்கும். வயிற்றில் எந்தவிதக் கிருமியிருந்தாலும் அவற்றை நீக்கிவிடும். நுரையீரலில் கிருமி சேராதவாறு தடுக்கும்.
இப்போது பெண்களுக்கு அதிகம் பாதிக்கும் பிரச்சினைகளில் தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரப்பதும், அதிக உடல் எடையும் முக்கியமானவை. இந்தப் பிரச்சினைகள் வரக் காரணம் பலமுறை பாலீஷ் செய்யப்பட்ட அரிசியைப் பயன்படுத்துவது, சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவில் எண்ணெய் சேர்ப்பது போன்றவையே.
நமது நாட்டில் பெண்களுக்கு சரியான உணவுப் பழக்கங்கள் இல்லை. நேரத்திற்குச் சாப்பிடமாட்டார்கள். குடும்பத்தில் எல்லாரும் சாப்பிட்ட மிஞ்சியதை அது வீணாகிவிடக் கூடாது என்பதற்காக நிறைய சாப்பிட்டு வைப்பார்கள். வேலைக்குப் போகும் பெண்கள் மெதுவாக சென்று சாப்பிடாமல் அவசர அவசரமாகச் சாப்பிடுவார்கள். இதனால் உடல் எடை அதிகரித்து விடும். தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரக்கும்.
தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைகோஸ், சோயாபீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது. மீன்வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அயோடின் உப்பைப் பயன்படுத்த வேண்டும். அயோடின் உப்பை பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைக்க வேண்டும். திறந்து வைக்கக் கூடாது. அப்படி திறந்து வைத்தால், உப்பிலுள்ள அயோடின் காற்றில் கரைந்து விடும்.
அந்தந்த சீசனுக்கு ஏற்ற உணவு வகைகளைப் பற்றிப் பெண்கள் தெரிந்து வைத்திருந்தால் குடும்பத்தில் ஒவ்வொருவரின் உடல்நிலைக்கேற்ற உணவு வகைகளைக் கொடுக்க முடியும். குளிர்ச்சியான நேரத்தில் பூசணி, பீர்க்கங்காய் போன்றவற்றை குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்களுக்குக் கொடுக்காமல் தவிர்க்கலாம்.
பெண்களுக்கு உள்ள இன்னொரு பிரச்சினை, மாதவிலக்கு சரியான கால அளவில் வராதது, அதிக ரத்தப்போக்கு, அல்லது குறைந்த ரத்தப்போக்கு போன்றவை. இதற்குச் சிறந்த மருந்து சோற்றுக் கற்றாழை. அதை வீட்டில் தொட்டியிலேயே வளர்க்கலாம். சோற்றுக் கற்றாழையை வெட்டி அதிலுள்ள சோறை எடுத்து வேகமாக விழும் குழாய்த் தண்ணீரில் காட்டி, நன்றாக அதன் கசப்பு போகும்வரை அலசி 1 டீஸ்பூன் 1 வேளை சாப்பிட்டு வந்தால் இந்த மாதவிலக்குப் பிரச்சினைகள் எல்லாம் நீங்கிவிடும்.
அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் ஒற்றையடுக்கில் உள்ள செம்பருத்திப் பூவின் இதழ்களை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அதன் கஷாயத்தை தொடர்ந்து 3 மாதங்கள் குடித்து வந்தால் குணமாகும்.
முதியவர்கள் எல்லாருக்கும் வருவது மூட்டுவலி. இதற்கு முடக்கத்தான் கீரை நல்ல மருந்து. மிளகு, சீரகம், இஞ்சி, வெங்காயம், பூண்டு எல்லாவற்றையும் அரைத்து அந்த விழுதை முடக்கத்தான் கீரையுடன் கலந்து தண்ணீரில் வேக வைத்துச் சூப் போல செய்து குடிக்க வேண்டும்.
இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 1 வேளை கோதுமை உணவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, காய்கறி போன்றவற்றைச் சாதத்தின் அளவிற்குச் சமமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். நமக்குச் சாதத்தின் அளவு அதிகமாகவும் காய்கறி, கீரை மிகவும் குறைவாகவும் "தொட்டுக்" கொண்டு சாப்பிட்டுத்தான் பழக்கம். இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும்.
40 வயதுள்ள எல்லாரும் மிளகு, வெந்தயம் சம அளவு கலந்து பொடி செய்து 1\4 டீஸ்பூன் ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த நோயிலிருந்து தப்பிக்கலாம்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அதிக அளவு உணவில் பயன்படுத்தினால் உடலில் நஞ்சு படியாது. கொழுப்பும் சேராது.
பொதுவாகச் சித்த மருத்துவம் என்றால் பத்தியம் இருக்க வேண்டுமே என்று பயப்படுவார்கள். சித்த மருத்துவம் என்றில்லை, எல்லா மருத்துவத்திலும் உணவுக் கட்டுப்பாடுகள் உள்ளன.
மீன், பால் போன்றவற்றைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படுபவர்கள் அதைச் சாப்பிடக் கூடாது. தோல் வியாதி உள்ளவர்கள் கத்திரிக்காய் அதிகமாகச் சேர்க்கக் கூடாது. புளிப்பு அதிகமாகச் சேர்க்கக் கூடாது.
சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை நோய்க்குப் பத்தியம், மருந்துக்குப் பத்தியம் என்று இரண்டு விதமான பத்தியங்கள் உள்ளன. சில நோய்களுக்கு சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. சித்த மருந்து சாப்பிடும் போது பாகற்காய், அகத்திக்கீரை, அருகம்புல் சாறு சாப்பிடக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தைக் குறைக்கும் தன்மை படைத்தவை. மருந்து சாப்பிட்டு விட்டு பாகற்காய், அகத்திக் கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் மருந்தின் பலன் கிடைக்காது.

உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்


கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.
இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்: 

* தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.
* எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.
* வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும்.
* இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும்.
* உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.
* மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.
* அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.
* புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.
பழங்கள் சாப்பிடும் முறை:
 
* காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.
* இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
  
* சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
* உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.  அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
* பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
* பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.  அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.

அரிய வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள்


இலந்தைப்பழம்:
சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்
இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் 'ஏ' சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது. இது உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.
களாப்பழம்:
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.
நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.
ஆல்பக்கோடா பழம்:
தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் 'ஏ', 'பி' உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.
காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியை குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும்.
வேப்பம்பழம்:
வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.
வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும்.
பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்துவிட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.